உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 13 பேர் பலி
266 ட்ரோன்கள், 45 ஏவுகணைகளை அழித்தது உக்ரைன்

கீவ், மே.25; கைதிகள் பரிமாற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்யா- உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் இரு தரப்பிலும் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
367 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசித் தாக்குதல்

பல்வேறு நகரங்களில் நேற்றிரவு (மே.24) 367 ட்ரோன்களையும் மற்றும் ஏவுகணைகளையும் வீசி ரஷ்யப் படைகள் தாக்கின.
இருநாடுகள் இடையிலான போரில் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாகப் பார்க்கப்படும் இந்தப் பேரழிவுத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
266 ட்ரோன்கள், 45 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன

ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 266 ட்ரோன்களையும், 45 ஏவுகணைகளையும் உக்ரைனின் விமானப்படை சுட்டு வீழ்த்தியது.
இதில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்தன.
அமெரிக்கா மௌனம் காப்பதாக உக்ரைன் அதிபர் கண்டனம்

தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாய் மூடி மவுனியாக பார்த்து வருவதாகவும், ரஷ்யா மீது வலுவான தடைகளை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.







