ஓய்வுக்குப் பின் ஆர். அஷ்வின் தனித்துவமான சாதனை..!
பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட்டில் கூட விளையாடியதில்லை..!!

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், புதிய தனித்துவமான சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். ஆம், 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட்டில் கூட விளையாடாத முதல் வீரர் என்ற சாதனைதான் அது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக ரவிச்சந்திரன் அஷ்வின் திடீரென அறிவித்தது கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளது. 38 வயதான அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
புதிய தனித்துவமான சாதனை..!!

இந்தியாவுக்காக 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14 வீரர்களில் அஷ்வினும் ஒருவர். மேலும் கிரிக்கெட் வரலாற்றில் நூற்றுக்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் 78 வீரர்களில் ரவிச்சந்திரன் அஷ்வினும் ஒருவராவார்.
இருப்பினும், 100 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுடன், டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கிய 147 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் கூட விளையாடாத முதல் வீரர் என்ற புதிய தனித்துவமான சாதனை அவருக்கு சொந்தமாகி உள்ளது. இத்தகைய சாதனைக்கு சொந்தக்காரரான முதல் வீரர் அவர் தான்.
சாதனைப் பட்டியலில் விரைவில் மேலும் 2 பேர்..!

இந்த பட்டியலில் விராட் கோலி மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகிய இருவரும் விரைவில் இணைய வாய்ப்புள்ளது. அவர்கள் இரண்டு பேரும் 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இதுவரை பாகிஸ்தானை எதிர்கொண்டதில்லை. தற்போதைக்கு அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை.
கிரிக்கெட் உலகிற்கு உள்ளேயும் வெளியேயும் இந்தியா-பாகிஸ்தான் இடையே பனிப்போர் நிலவி வருவதால், 2007-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றதில்லை.
ஆர். அஷ்வின், 2011ஆம் ஆண்டில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதால், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. எனவே, ரவிச்சந்திரன் அஷ்வின் புதிய தனித்துவமான சாதனைக்கு சொந்தக்காரராகி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசு பொருளாகியுள்ளது.







