சிரியா மீதான தடைகள் நீக்கப்படும்: டொனால்டு டிரம்ப்
சிரியா சிறந்ததை அடைய ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாகப் பேச்சு

ரியாத்,மே.14; சிரியா மீதான தடைகள் அனைத்தும் நீக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், சௌதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற முதலீட்டு மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
“சிரியா மீதான தடைகள் இனி தேவையில்லை”

அப்போது டிரம்ப், சிரியா மீதான தண்டனை நடவடிக்கைகள் அவற்றின் நோக்கத்தை அடைந்துவிட்டதாகவும், இனி அவை தேவையில்லை என்றும் கூறினார்.
தடைகள் அகற்றப்படுவதால் சிரியா சிறந்ததை அடைய ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
சிரியா பிரகாசிக்க வேண்டிய நேரம்: டிரம்ப்

“இது அவர்கள் (சிரியா) பிரகாசிக்க வேண்டிய நேரம்; ஆகவே நாங்கள் தடைகளையெல்லாம் அகற்றுகிறோம்” என அதிபர் அறிவித்தார்.
அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு சிரியா மீதான வாஷிங்டனின் பல வருட கொள்கையில் ஒரு வியத்தகு மாற்றத்தைக் குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
தடைகளை முடிவுக்கு கொண்டுவர விரைவில் நடவடிக்கைகள்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்த வார இறுதியில் துருக்கியில் சிரியாவின் வெளியுறவு அமைச்சர் அசாத் அல்-ஷைபானியைச் சந்திப்பார் என்றும், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (MBS) மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோருடன் பேசிய பின்னர் தடைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியாவில் 14 ஆண்டுகளாக நீடித்த போர்

முன்னதாக, சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த முன்னாள் அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே சுமார் 14 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது.
துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்), சிரியா தேசிய படை, அமெரிக்க ராணுவத்தின் ஆதரவு பெற்ற பிரீ சிரியா படை உள்ளிட்ட பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் சிரியா அரசுக்கு எதிராக போரிட்டு வந்தன.
சிரியா போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பு

ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் ஆதரவு அளித்து வந்தன. இந்தச் சூழலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியது. அதையடுத்து ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பினார். தற்போது அங்கு இடைக்கால அதிபராக அகமது அல்-ஷரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் 14 ஆண்டுகளாக நீடித்த போரின்போது மனித உரிமை மீறல்கள் பெருமளவில் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
போரில் சிரியா நாட்டவர் லட்சக்கணக்கில் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர்.







