பயங்கரவாதிகள் 300 கி.மீ தொலைவிலிருந்து வந்தது எப்படி?
மத்திய அரசு தெளிவுபடுத்த சச்சின் பைலட் வலியுறுத்தல்

ஜெய்ப்பூர்,மே.26; எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஹல்காம் பகுதியை பயங்கரவாதிகள் எவ்வாறு அடைந்தனர் என்பதை தெளிவுபடுத்துமாறு மத்திய அரசை ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் வலியுறுத்தி உள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் (ஏப்ரல்) 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா எனக் கேள்வி

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டார்களா அல்லது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்டார்களா என்று மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று சச்சின் பைலட் வலியுறுத்தி உள்ளார்.
பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (எல்ஓசி) 300–400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கை எவ்வாறு அடைய முடிந்தது என்று பைலட் வினவினார்.
இந்தியாவின் பதிலடி தாக்குதல்களில் கண்டுபிடிக்கப்பட்டார்களா?

ஏப்ரல் 22 தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மே 7ஆம் தேதியன்று ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதல்களில் கண்டுபிடிக்கப்பட்டார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என சச்சின் பைலட் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா பேசியதையும், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் மனைவிகள் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடியிருக்க வேண்டும் என்று கூறிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராம் சந்தர் ஜங்ராவையும் சச்சின் பைலட் கடுமையாக விமர்சித்தார்.
கர்னல் குரேஷியை விமர்சித்தவர் மீது என்ன நடவடிக்கை?

அத்தகைய தலைவர்களை பாஜக பாதுகாப்பதாக குற்றஞ்சாட்டிய சச்சின் பைலட், அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.







