WTC: முதன்முறையாக பட்டம் வென்றது தென்னாப்பிரிக்கா
15 ஆண்டுகளில் முதன்முறையாக ஆஸி., அணிக்கு சறுக்கல்

லண்டன், ஜூன்.15; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி பட்டத்தை வென்றுள்ளது. 27 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க அணி வென்றிருக்கும் முதல் ஐசிசி பட்டம் இதுவாகும்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்னாப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்தன.
தென்னாப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் இலக்கு

மூன்றாவது நாளான நேற்று முன்தினம் (ஜூன்.13) ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 207 ரன்கள் எடுத்தது.
முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றிருந்த 74 ரன்களையும் சேர்த்து, ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு 282 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்த அணியும் 280 ரன்களுக்கு அதிகமான இலக்கை விரட்டிப் பிடித்ததில்லை.
சவாலான இலக்கை விரட்டிப்பிடித்து வெற்றி

இந்த சவாலான இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்சை ஆடத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியின் விளிம்பில் இருந்தது.
மார்க்ரம் 102 ரன்களுடனும், கேப்டன் பவுமா 63 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நான்காவது நாளான நேற்று மேலும் 69 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, மொத்தம் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.
WTC போட்டி; தென்னாப்பிரிக்கா முதன்முறையாக மகுடம்

ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாறு படைத்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உலகக் கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி பட்டம் வெல்வத இதுவே முதன்முறையாகயாகும்.
கடந்த அரை நூற்றாண்டில் ஆஸ்திரேலிய அணி 14 ஐ.சி.சி இறுதிப் போட்டிகளில் விளையாடி, 10-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.
அதேவேளையில் கடந்த 15 ஆண்டுகளில் ஐ.சி.சி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சறுக்கலை சந்தித்திருப்பது இதுவே முதன்முறையாகும்.







