போட்டிக்கு முன் ‘பளார்’ விட்ட மைக் டைசன்

குத்துக்கு பதிலாக 'அறை'; சர்ச்சையில் சிக்கிய 'கடி'மன்னன்

மைக் டைசன் – ஹெவிவெயிட் குத்துச்சண்டைப் போட்டியில் பட்டங்களை வாங்கிக் குவித்தவர். அதற்கு இணையாக சர்ச்சையிலும் சிக்கியவர். குத்துச்சண்டை வளையத்தில் முன்னணி வீரரான இவாண்டர் ஹோலிஃபீல்டின் காதைக் கடித்துத் துப்பியது, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்தது என, டைசனுக்கு ‘புகழ்’ சேர்த்த விசயங்கள் பல உண்டு.

கரடு முரடான வாழ்க்கையை கடந்து வந்தவர் என்பதாலோ என்னவோ, குத்துச்சண்டை வளையத்தில் அவரது குத்து ஒவ்வொன்றும் இடிபோன்று தான் இறங்கும். ஒரு காலத்தில் எதிராளிகளை மிரள வைத்த மைக் டைசன், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றார். தொழில் முறை போட்டிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் கண்காட்சிப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார்.

அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் டைசன், தற்போது மீண்டும் குத்துச்சண்டை களத்திற்குள் வந்துள்ளார். இம்முறை டைசனுக்கு சவால் விடுவது, யூடியூபராக இருந்து ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரராக உருவெடுத்துள்ள ஜேக் பால் என்ற 27 வயது இளைஞர்.

மைக் டைசன் குத்துச்சண்டை வளையத்திற்குள் வந்தவுடன், அவருடன் சேர்ந்து சர்ச்சையும் வந்துள்ளது. இறுதிப்போட்டி டெக்சாஸில் இந்திய நேரப்படி நாளை நடைபெறும் சூழலில், அதற்கு முன்னதாக அவர்கள் இருவரும் Face – Off-ல் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர். அப்போது ஜேக் பாலின் கன்னத்தில் அறைந்தார் ‘கடி’க்குப் பெயர் போன மைக் டைசன். இதனால் மோதல் ஏற்படும் சூழல் உருவாக, அதனை பாதுகாவலர்கள் தடுத்தனர்.

டைசனின் செயல் ஜேக் பாலுக்கு பெரியளவில் கோபத்தை ஏற்படுத்தவில்லை. “அவர் (டைசன்) கோபமாக இருக்கிறார், அவர் ஒரு கோபமான குட்டி தெய்வம், மைக் டைசன் எனது கன்னத்தை கிள்ளியது போன்ற உணர்வைத் தந்தது” என ஜேக் பால் கூறினார். ஆனாலும், டைசனுக்கு நிச்சயம் வளையத்தில் பதிலடி கொடுப்பேன் என்று, ஜேக் பால் சூளுரைத்துள்ளார். டைசனை நாக் -அவுட் செய்வேன் என்றும் பால் கூறியுள்ளார்.

விளையாட்டுப் போட்டிகளை ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீம் செய்வது தற்போது ஒரு ட்ரெண்டாகி வரும் சூழலில், மைக் டைசன் – ஜேக் பால் இடையிலான போட்டியும் நெட் பிளிக்ஸில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்போட்டியை சுமார் 80 ஆயிரம் பேர் நேரில் பார்க்க உள்ளனர். அதுமட்டுமின்றி கோடிக்கணக்கான ரசிகர்களும் இப்போட்டியை நேரலையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

“The Baddest Man on the Planet” என்றழைக்கப்படும் மைக் டைசனை, அவரது வயதில் பாதிக்கும் குறைந்தவரான ஜேக் பால் வீழ்த்துவாரா என்பதைக் காண உலகம் பேரார்வம் கொண்டுள்ளது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x