சென்னையில், 48ஆவது புத்தகக்காட்சி தொடக்கம்

வாசகர்களுக்கு ஜன.12 வரை கொண்டாட்டம்

சென்னை, டிச.28; வாசகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த 48ஆவது சென்னை புத்தகக்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று (டிச.27) தொடங்கியது.

சென்னை புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.

ஒரு லட்சம் தலைப்புகளில் நூல்கள்

ஜனவரி 12ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் புத்தகக்காட்சியில் பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நூல் விற்பனை வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும் என்று பபாசி நிர்வாகிகள் கூறியுள்ளனர். பார்வையாளர்களுக்கான நுழைவுக்கட்டணம் ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரங்கிலும் நூல்களுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. சில அரங்குகளில் பதிப்பாளர்கள் 20,30,50 விழுக்காடு வரையிலும் சலுகை விலையில் நூல்களை விற்பனைக்கு வைத்திருக்கின்றனர்.

சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள்…

புத்தகக்காட்சியை ஒட்டி அனைத்து நாட்களிலும் அறிவியல், இலக்கியம், வரலாறு, தொல்பொருள் சார்ந்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல மாணாக்கரின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தொடக்க விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், தென் சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் லியோனி, மேயா் ஆர்.பிரியா, பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விருது வழங்கும் தேதி பின்னர்…

தொடக்க விழாவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலைஞர் விருது, பபாசி விருது வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற சூழலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி ஏழு நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுவதால், விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x