திரிபுராவை 10 விக்கெட்டில் வீழ்த்தி அபாரம்
விஜய் ஹசாரே தொடரில் 2-வது இடத்தில் தமிழ்நாடு

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், திரிபுராவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அபாரமாக வீழ்த்தியுள்ளது.

விஜய் ஹராரே கிரிக்கெட் டிராபி தொடர் (‘லிஸ்ட் ஏ’) இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 38 அணிகள், 5 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. ஆந்திராவில் நடந்த ‘டி’ பிரிவு லீக் போட்டியில், தமிழகம் மற்றும் திரிபுரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ‘டாஸ்’ வென்ற தமிழக அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

பின்னர் களமிறங்கிய திரிபுரா அணி, தமிழ்நாட்டின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல் சரிந்தது. குறிப்பாக வருண் சக்ரவர்த்தி சுழலில் திரிபுரா சின்னாபின்னமானது. அதிகபட்சமாக அக்னி சோப்ரா (23), மோகித் (17), ஆண்டர்சன் (12) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கை தாண்டினர். இறுதியில் திரிபுரா அணி 21.2 ஒவரில் 71 ரன்களுக்கு சுருண்டது. 5.2 ஒவர் பந்துவீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார் வருண் சக்ரவர்த்தி. 
72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கைத் துரத்திய தமிழ்நாடு, திரிபுராவின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டது. 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அபாரமாக வென்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் துஷார் (27), ஜெகதீசன் (46) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை வருண் சக்ரவர்த்தி தட்டிச் சென்றார். தமிழ்நாடு ‘டி’ பிரிவில் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில், 3 வெற்றி, 1 தோல்வி, 1 ரத்து, 14 புள்ளிகள் எடுத்து, புள்ளிப் பட்டியலில் 2-வதாக இருக்கிறது.








