பிரிஸ்பேன் 3வது டெஸ்ட் டிராவானது
அடிக்கடி மழை குறுக்கீடால் சமனில் முடிந்தது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் 3-வது டெஸ்ட் போட்டியில் மழையின் தொடர் குறுக்கீட்டால் இந்தியா ‘பாலோ-ஆன்’ தவிர்த்த நிலையில் ‘டிரா’வில் நிறைவடைந்தது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட ‘பார்டர் -கவாஸ்கர்’ டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. 3-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஸ்மித், டிராவிஸின் அதிரடி சதங்களால் ஆஸ்திரேலியா 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்து ‘பாலோ-ஆன்’ தவிர்த்தது இந்தியா.
நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில், 193 ரன் பின்தங்கிய நிலையில் ஆட்டத்தை தொடர்ந்த இந்தியா, தமது முதல் இன்னிங்சில் 260 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆகாஷ் தீப் 31 ரன்களில் வெளியேற, பும்ரா (10) அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். கடைசி விக்கெட்டுக்கு இருவரும் 47 ரன்கள் அடித்து அசத்தினர். இதனையடுத்து ஆஸ்திரேலியா 185 ரன்கள் முன்னிலை பெற்றது.
2-வது இன்னிங்சிலும் தொடர் மழையும், மோசமான வானிலையும் அடிக்கடி குறுக்கிட்டதால், ஆஸ்திரேலிய வீரர்கள் விரைவாக ரன்கள் அடிக்க முயற்சித்தனர். இதனால் அவ்வணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுபோல் மளமளவென சரிந்தன. இதில் பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் வேகத்தில் மிரட்ட, 7 விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தபோது ஆஸ்திரேலியா ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் 54 ஓவரில் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனை விரட்டிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்கார்கள் ஜெய்ஸ்வால் (4*), கே.எல்.ராகுல் (4*), விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்த போது, மீண்டும் கனமழை பெய்தது. தொடர்ந்து போதிய வெளிச்சமும் காபா மைதானத்தில் இல்லாததால், 3-வது டெஸ்ட் போட்டி, 2 அணிகளுக்கும் வெற்றி, தோல்வி இல்லாமல் ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நடப்புத் தொடர் 1-1 என சமநிலையில் நீடிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் ஆட்டம், வரும் டிச. 26ம் தேதி “பாக்சிங் டே” போட்டியாக மெல்போர்னில் துவங்குகிறது.
இதனிடையே நடப்புத் தொடரில் வேகப்பந்து வீச்சில் அசத்தி வரும் பும்ரா, ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் கபில்தேவை (51 விக்கெட், 11டெஸ்ட்) முந்தினார். இங்கு விளையாடிய 10 டெஸ்டில் 53 விக்கெட் சாய்த்து முதலிடத்தை பிடித்துள்ளார் பும்ரா. 3-வது இடத்தில் கும்ளே (49 விக்கெட், 10 டெஸ்ட்) உள்ளார்.
சிறப்பு