200 விக்கெட் வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டிய பும்ரா
'Big bird' ஜோயல் கார்னரின் சாதனையை முறியடித்து அசத்தல்

மெல்போர்ன், டிச.29; டெஸ்ட் கிரிக்கெட்டில், அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்று ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சில் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பும்ரா இந்த சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளார். மேலும் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் வசம் வந்துள்ளது.
பும்ரா 200 விக்கெட்; புதிய சாதனை

தனது 44-ஆவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் 44 போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை எட்டிய ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஆகிய பந்துவீச்சாளர்களின் வரிசையில் பும்ராவும் இணைந்துள்ளார்.
இதுதவிர, Big bird என்றழைக்கப்படும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோயல்கார்னரின் முந்தைய சாதனை ஒன்றையும் பும்ரா முறியடித்துள்ளார்.
ஜோயல் கார்னரை முந்திய பும்ரா

அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோயல் கார்னர் 4,067 ரன்களை விட்டுக்கொடுத்து 200 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ஆனால், ஜஸ்பிரித் பும்ரா 3,912 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 200 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
இதுதவிர, பும்ரா 19.56 என்ற அற்புதமான பந்துவீச்சு சராசரியுடன் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். வரலாற்றில் 20 சராசரிக்கும் கீழ் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கிடைத்துள்ளது.







