4ஆவது டெஸ்ட்; ஆஸி., அணி 333 ரன்கள் முன்னிலை
சற்று கடினமான இலக்கை எட்டி வெற்றி பெறுமா இந்தியா?

மெல்போர்ன், டிச.29 ; மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 300-க்கும் அதிகமான ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில், 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்திருந்தது, நிதிஷ் குமார் ரெட்டி 105 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
4ஆவது நாளான இன்று நிதிஷ் குமார் மேலும் 9 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க இந்திய அணியின் இன்னிங்ஸ் 369 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
பின்னர் 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடத்தொடங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் நேர்த்தியாக பந்துவீசியதால் ரன் எடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறியது.
ஜஸ்பிரித் பும்ரா 200ஆவது விக்கெட்

முன்னணி வீரர் டிராவிஸ் ஹெட் ஒரு ரன் எடுத்திருந்தபோது அவரை பும்ரா வெளியேற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா சாய்த்திருக்கும் 200ஆவது விக்கெட் இதுவாகும்.
ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. அவ்வணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க மார்னஸ் லபுசேன் நிதானமாக விளையாடி 70 ரன்கள் எடுத்தார். அவருக்கு பின்னர் வந்த வீரர்களும் உடனுக்குடன் பெவிலியன் திரும்பினர்.
கேப்டன் பேட் கம்மின்ஸ் பொறுப்புணர்வுடன் விளையாடி 41 ரன்கள் எடுத்தார். பத்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நாதன் லயனும், ஸ்காட் போலண்டும் 53 ரன்கள் சேர்த்து கடைசிவரை களத்தில் உள்ளனர்.
ஆஸி., 333 ரன்கள் முன்னிலை

இன்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து, ஒட்டுமொத்தமாக 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் 4 கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டதை ஆஸ்திரேலிய அணி சரியான முறையில் பய.ன்படுத்திக் கொண்டது.
இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கை சற்று ஓங்கியுள்ளது. இந்திய அணி வெற்றிபெறும் நோக்கில் விளையாடுமா அல்லது டிராவை மனதில் கொண்டு விளையாடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.







