ரஹ்மத் ஷா அதிரடி இரட்டை சதம்
ஜிம்பாப்வே-க்கு ஆப்கன் தகுந்த பதிலடி

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரஹ்மத் ஷா இரட்டை சதம் விளாசியதில், ஆப்கானிஸ்தான் தக்க பதிலடி கொடுத்து இருக்கிறது.

ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அவ்வணியின் சீன் வில்லியம்ஸ் (154), கேப்டன் கிரெய்க் எர்வின் (104), பென்னெட் (110*) ஆகியோர் அதிரடி சதம் அடிக்க முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவித்தது. ஆப்கன் சார்பில் கசன்பர் 3, நவீத் சட்ரன், ஜஹிர் கான், ஜியா உர் ரெஹ்மான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 2-ம் நாள் முடிவில் 95/2 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 3-ம் நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. ஆப்கனின் ரஹமத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். அவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் விழிபிதுக்கின்றனர். நேற்று முழுவதும் அவர்களால் 1 விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.

இதில் ரஹமத் ஷா அதிரடியாக இரட்டை சதமடித்து 231 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். ஹஷ்மதுல்லாவும் சிறப்பான சதம் அடித்து 141 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 3-ம் நாள் முடிவில் ஆப்கன் 2 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்துள்ளது. 3வது விக்கெட்டுக்கு இதுவரை ரஹமத் ஷா – ஹஷ்மதுல்லா ஜோடி 361 ரன்கள் சேர்த்துள்ளது. இதன்மூலம் ஆப்கன் அணியின் எந்த விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையை புரிந்துள்ளது. மேலும் ஆப்கன் வீரர் ஹாஷித்தை(200*, 2021-ல் எதிர் ஜிம்பாப்வே) தொடர்ந்து 2-வது வீரராக ரஹமத் ஷா இரட்டை சதம் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.








