மீண்டும் Box Office King ஆன விஜய்!

நடிகர் விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் கடந்த நான்கு நாள்களில் உலகம் முழுவதும் ரூ.288 கோடியை வசூலித்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் விஜய்யின் 68ஆவது படமான ‘The GOAT’ ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (G.O.A.T. – Greatest Of All Time) படம் உலகம் முழுவதும் கடந்த 5ஆம் தேதி வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, யோகி பாபு, அஜ்மல், மோகன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திரையரங்கில் தி கோட் திரைப்படத்தை பார்விஜய்யின் நடிப்பை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

GOAT திரைப்படம் தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் 120 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உலகம் முழுவதும் 288 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான ஏஜிஎஸ் நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 750 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

முன்னதாக, விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ திரைப்படம் வெளியான முதல் நாளில், உலகம் முழுவதும் 140 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான கோட் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதன் காரணமாகவே லியோ திரைப்படத்தின் வசூலை விட முதல் நாளில் மட்டும் குறைவாக பெற்றிருப்பதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் திரைப்படத்தின் வருவாய் அதிகரிக்கும் என்றும் ‘Box office கலெக்ஷன் கிங்’ என அழைக்கப்படும் விஜய் திரைப்படத்தின் கலெக்ஷன் இந்த வார இறுதிக்குள் 500 கோடி ரூபாயை நெருங்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.







