WTC; பெரும் சரிவிலிருந்து மீண்டது ஆஸி., அணி
3ஆவது நாளான இன்றே போட்டி முடிவுக்கு வந்துவிட வாய்ப்பு..!

லண்டன், ஜூன்.13; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி கடும் சரிவிலிருந்து மீண்டு, சற்று வலுவான நிலையில் உள்ளது.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
138 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா

முதல் நாளான நேற்று முன்தினம் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவது நாளான நேற்று, தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, மேலும் 95 ரன்கள் சேர்த்து 138 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
பேட் கம்மின்ஸ் டெஸ்ட்டில் 300ஆவது விக்கெட்

அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 300ஆவது விக்கெட்டை கைப்பற்றி புதிய மைல்கல்லை எட்டினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடத்தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் மீண்டும் நெருக்கடி கொடுத்தனர்.
பந்துவீச்சில் மீண்டும் மிரட்டிய தென்னாப்பிரிக்கா

குறிப்பாக லுங்கி நிகிடி மற்றும் ககிசோ ரபாடா ஆகியோரின் பந்துவீச்சு மிரட்டும் வகையில் இருந்தது.
ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 73 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ஆஸ்திரேலியாவை மீட்ட 8ஆவது விக்கெட் ஜோடி

மூழ்கும் கப்பலாக இருந்த ஆஸ்திரேலிய அணியை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும், மிட்செல் ஸ்டார்க்கும் போராடி மீட்டனர்.
8ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அவர்கள் , 61 ரன்கள் சேர்த்து, அணியை பெரும் சரிவிலிருந்து காப்பாற்றினர்.
இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
உலகச் சாம்பியன் யார்?; இன்றே முடிவு தெரிய வாய்ப்பு

மிட்செல் ஸ்டார்க் 16 ரன்களுடனும் நாதன் லயன் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்குமே சமஅளவில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது நாளான இன்றைய தினமே போட்டி முடிவுக்கு வந்து, யார் உலகச் சாம்பியன் என்பது தீர்மானமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







