ஆட்டோ ஓட்டுநருடன் ராகுல் டிராவிட் கடும் வாக்குவாதம்
கார் மீது ஆட்டோ மோதியதால் கோபம் கொண்டு தர்க்கம்

பெங்களூரு, பிப்,05; பெங்களூருவில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் கார் மீது ஆட்டோ மோதியது. இதனால் கோபமடைந்த டிராவிட், ஆட்டோ ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான டிராவிட், சொந்த ஊரான பெங்களூருவில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
ராகுல் டிராவிட் காரின் பின்னால் ஆட்டோ மோதியது

ஓரிடத்தில், போக்குவரத்து நெரிசலில் டிராவிட்டின் கார் சிக்கியிருந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு சரக்கு ஆட்டோ டிராவிட்டின் கார் மீது மோதியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த டிராவிட் தனது காரிலிருந்து இறங்கி, அந்த ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது தாய்மொழியான கன்னடத்தில் டிராவிட் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.
டிராவிட்- ஆட்டோ ஓட்டுநர் தர்க்கம்; வீடியோ வைரல்

அப்போது வழிப்போக்கர் ஒருவர் டிராவிட்டிற்கும்- ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே நடந்த தர்க்கத்தை கைப்பேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டார்.
பிரேக்குகளைப் பேற்றி அவர்கள் ஏதோ பேசுவதை வாக்குவாதத்தில் கேட்க முடிந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ராகுல் டிராவிட், ஆட்டோவில் எழுதப்பட்டிருந்த ஓட்டுநரின் கைப்பேசி எண்ணை குறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.







