கிரிக்கெட்டில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட்..! பின்னணி என்ன?

அது என்ன Cricket-ல் Boxing day Test?

பாக்சிங் டே – டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் கொண்டாடப்படும் பாரம்பரியங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ்-க்கு மறுநாள், அதாவது டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னில் தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்றழைக்கப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட போட்டி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்த போட்டியாகும். அதெல்லாம் சரி, அது என்ன கிரிக்கெட்டில் ‘பாக்சிங் டே? என பலருக்கும் மனதில் கேள்வி எழும். இந்தப் பெயர் எப்படி வந்தது என்பதன் பின்னணியில் பல்வேறு சுவையான தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

1800-களில் பிரிட்டனில் விக்டோரியா மகாராணி அரியணையில் இருந்தபோது தான் ‘பாக்சிங் டே’ எனப் பெயர் வந்ததாக கூறுகின்றனர். அந்தக் காலங்களில் செல்வந்தர்கள் சில பொருட்களை ஒரு அட்டைப் பெட்டியில் அடுக்கி வைத்துவிடுவார்களாம். அந்தப் பெட்டியை கிறிஸ்துமஸ் தினத்தன்று பணிபுரிந்தவர்களுக்கு, மறுநாள் தேவாலயத்தில் வைத்து கொடுத்து மகிழ்வார்களாம். அது பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்டதால், டிசம்பர் 26ஆம் தேதி ‘பாக்ஸ் டே’ என்று அழைக்கப்பட்டதாகவும் பின்னர் ‘பாக்சிங் டே’ என்றாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

இங்கிலாந்து பேரரசின் ஒரு பகுதியாக இருந்த, அதாவது காமன்வெல்த் நாடுகளில் டிசம்பர் 26ஆம் தேதி ‘பாக்சிங் டே’ கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, நைஜீரியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ‘பாக்சிங் டே’ அன்று பாரம்பரிய போட்டிகள் விளையாடப்படுகின்றன.

‘பாக்சிங் டே’ டெஸ்ட் 1950-51 ஆஷஸ் தொடரின் போது, ​​மெல்போர்னில் டிசம்பர் 22 முதல் 27 வரை விளையாடப்பட்டது, நான்காவது நாள் ஆட்டம் ‘பாக்சிங் டே’ ஆக இருந்தது, ஆனால் 1953 மற்றும் 1967-க்கு இடையில் மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ அன்று டெஸ்ட் போட்டிகள் எதுவும் விளையாடப்படவில்லை. அதேவேளையில் 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அது முறைப்படுத்தப்பட்டு, நவீன தோற்றம் கொண்டதாக மாறியது.

1968 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ‘பாக்சிங் டே’ தினத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி, 1950ஆம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. 1980 முதல், ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 முதல் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை நடத்துகிறது.

கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கடுமையான போட்டியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட மகிழ்ச்சியையும் கொண்டதாக இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளின் தேசிய கிரிக்கெட் அணிகள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் வரும்போது, கிறிஸ்துமஸ் சமயத்தில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் வரும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படுகிறது. அதன்படி, அடுத்த மாதம் வரவிருக்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுடன் மோதவிருப்பது இந்திய அணியாகும்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x