காலே டெஸ்ட்; ஆஸி., அணி 654 ரன்கள் குவிப்பு

இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளிப்பு

காலே, ஜன.31; இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 654 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இலங்கை காலேவில் நேற்று முன்தினம் (ஜன.29) தொடங்கி நடைபெற்று வருகிறது.

கவாஜா இரட்டை சதம்; ஸ்டீவன் ஸ்மித் சதம்

டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்திருந்தது. உஸ்மான் கவாஜா 147 ரன்களுடனும், ஸ்டீவன் ஸ்மித் 104 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பலவீனமான பந்துவீச்சு; அதிக விலை கொடுத்த இலங்கை

இரண்டாவது நாளான நேற்று (ஜன.30) தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியினர், பலவீனமான இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா, நங்கூரம் பாய்ச்சியது போல் நின்று விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவர், 232 ரன்கள் எடுத்திருந்தபோது பிரபாத் ஜெயசூர்யாவின் பந்தில் விக்கெட்டை இழந்தார்.

3ஆவது விக்கெட்டுக்கு 266 ரன்கள்

அவருடன் இணைந்து அசத்தலாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் 141 ரன்கள் எடுத்தார். டெஸ்ட்டில் இது அவரது 35ஆவது சதமாகும். ஸ்டீவன் ஸ்மித்தும், உஸ்மான் கவாஜாவும் மூன்றாவது விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தனர்.

அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஸ் அசத்தல் சதம்

அறிமுக வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் மெச்சத்தகுந்த வகையில் விளையாடி , 90 பந்துகளில் சதமடித்தார். அவர் 102 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

ஆஸி., அணி 654 ரன்கள் குவித்து டிக்ளேர்

ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 654 ரன்கள் குவித்திருந்தபோது முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடத்தொடங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. பீல்டிங்கில் 154 ஓவர்களை செலவழித்ததால் சோர்வடைந்திருந்த தொடக்க ஆட்டக்காரர்களான ஓஷத ஃபெர்னாண்டோ மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் முதல் ஐந்து ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

பீல்டிங் அயர்ச்சியால் இலங்கை பரிதாபம்

இதில் ஃபெர்னாண்டோ, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் களமிறங்கிய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னேமானின் முதல் ஓவரிலேயே 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

நேற்றைய (ஜன.30) ஆட்டநேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.

2 நாட்கள் உள்ளதால் இலங்கைக்கு சிக்கல்

தினேஷ் சண்டிமால் 9 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் 2 நாட்கள் முழுமையாக உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x