படகு விபத்தில் சிக்கிய சவுரவ் கங்குலியின் சகோதரர்

கடலில் விளையாட்டுகளை வேடிக்கை பார்த்தபோது அசம்பாவிதம்

புரி, மே27; ஒடிசா மாநிலம் புரியில், படகு கவிழ்ந்ததால் கடலில் சிக்கிக் கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் சகோதரரும் அவரது மனைவியும் நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர் தப்பினர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி ஒரு முன்னாள் வங்க கிரிக்கெட் வீரர் மற்றும் வங்க கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவர் ஆவார்.

கங்குலியின் சகோதரர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது

சினேகாஷிஷ் கங்குலியும் அவரது மனைவி அர்பிதாவும் விடுமுறைக்காக நேற்று முன்தினம் (மே.25, ஞாயிறு) ஒடிசாவில் உள்ள புரி கடற்கரைக்குச் சென்றிருந்தனர்.

அங்கு கடலில் நீர் விளையாட்டுகளை வேடிக்கை பார்ப்பதற்காக அவர்கள் இருவரும் ஒரு விசைப் படகில் சென்றனர். அவர்களுடன் மேலும் ஒரு தம்பதியும் பயணித்தனர்.

படகுக்கு அடியில் சிக்கிக்கொண்ட கங்குலியின் சகோதரர்

அப்போது ராட்சத அலை தாக்கியதில், சினேகாஷிஷ் கங்குலி தம்பதி பயணித்த படகு தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் அவர்கள் அனைவரும் படகின் அடியில் சிக்கிக் கொண்டனர்.

உயிர் காக்கும் கவச உடைகளை அணிந்திருந்த போதிலும், அச்சத்தில் உறைந்தனர். மீட்புப் படையினரும், அருகிலிருந்தவர்களும் விரைந்து செயல்பட்டு சினேகாஷிஷ் கங்குலி, அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

இது இரண்டாவது வாழ்க்கை: கங்குலியின் சகோதரர்

உயிர் பிழைத்தது குறித்து நிம்மதிப் பெருமூச்சுவிட்ட சினேகாஷிஷ் கங்குலி, “மரணத்தின் விளிம்பிற்கே சென்று வந்தது போன்று உணர்ந்தேன், எனக்கு ஏற்பட்டிருக்கும் நிம்மதியை வெளிப்படுத்த சொற்களில்லை, நான் புரி ஜெகந்நாதருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், இது எங்களுக்கு இரண்டாவது வாழ்க்கை” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

புரி பயணத்தை முடித்துக்கொண்டு கொல்கத்தா திரும்பிய சினேகாஷிஷ் கங்குலி-அர்பிதா தம்பதியை உறவினர்களும், நண்பர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x