விமான எஞ்சினுக்குள் ‘புஷ்அப்ஸ்’ எடுத்த பாடி பில்டர்
வேலை செய்யும் காட்சியை நகைச்சுவையாக சித்தரித்ததாக விளக்கம்

சிட்னி, பிப்.04; சிட்னி விமானநிலையத்தில், விமான எஞ்சினுக்குள் ‘பாடி பில்டர்’ ஒருவர் ‘புஷ்அப்ஸ்’ செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
23 வயதான (Preslie Ginoski) பிரெஸ்லி ஜினோஸ்கி என்ற ‘பாடி பில்டர்’, ஒரு வணிக ஜெட் விமானத்தின் எஞ்சினுக்குள் இருந்தபடி ‘புஷ்அப்ஸ்’ எடுக்கும் காட்சிகள் டிக்டாக்கில் வெளியாகி வைரலானது.
விமான எஞ்சினுக்குள் ‘புஷ்அப்ஸ்’; அதிர்ந்தது உலகம்

“விமானத்திற்கு முன் விரைவான பம்ப்” என்ற தலைப்பில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள், கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த சிட்னி விமானநிலைய அதிகாரிகள், ஜினோஸ்கியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
பாடி பில்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உறுதி

அதில், “விமானநிலையத்தில் பாதுகாப்பற்ற நடத்தைக்கு சிட்னி விமான நிலையம் பூஜ்ய சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பு மீறல்கள் பற்றிய அனைத்து அம்சங்களையும் நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம்; பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிலைய செயல்பாடுகளின் பாதுகாப்பு எங்கள் உயர்ந்த முன்னுரிமையாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடி பில்டரின் செயல் தொடர்பான விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிட்னி விமானநிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
செயலை நியாயப்படுத்தும் ‘பாடி பில்டர்’

ஆன்லைனில் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும், ஜினோஸ்கி தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார். வீடியோவைப் பதிவு செய்வதற்கு முன்னர் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
தனது வீடியோ தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதல்ல ஏன்றும், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜினோஸ்கி விளக்கமளித்துள்ளார்.
“வேலை செய்யும் காட்சியை நகைச்சுவையாக சித்தரித்தேன்”

தான் விமானத்தில் இருந்து இறங்கி வேலை செய்யத் தொடங்கும் காட்சியை சித்தரித்து, நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வீடியோவை எடுத்ததாக பாடி பில்டர் ஜினோஸ்கி தெரிவித்துள்ளார்.
தான் ‘புஷ்அப்ஸ்’ எடுத்த விமானம் மறுநாள் தான் புறப்படவிருந்ததாகவும் பாடி பில்டர் பிரெஸ்லி ஜினோஸ்கி கூறியிருக்கிறார்.







