டெஹ்ரான் மக்கள் உடனே வெளியேற எச்சரிக்கை
ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்ற டிரம்ப் பேட்டி

கனனாஸ்கி, ஜூன்.17; ஈரான் தலைநகர், டெஹ்ரானில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கனடாவில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற டிரம்ப், முன்கூட்டியே அங்கிருந்து வெளியேறினார்.
டெஹ்ரானிலிருந்து மக்கள் வெளியேற டிரம்ப் எச்சரிக்கை

அப்போது அவர், டெஹ்ரானில் உள்ள மக்கள் உடனே வெளியேற வேண்டும் என்று எச்சரித்தார்.
‘இஸ்ரேலுக்கும் -ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தைவிட சிறந்த தீர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.
ஆனால், அதிபர் என்ன சொல்ல வந்தார் என்பது தனக்கு தெளிவாகத் தெரியவில்லை என்று டிரம்ப்பின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் வந்த வட அமெரிக்க செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்கா அதிக ஈடுபாடு?

டிரம்ப்பின் கருத்து, இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்த ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக பிபிசி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் தொடர்ந்து 5ஆவது நாளாக தாக்குதல்

இதனிடையே, இஸ்ரேலும் ஈரானும் ஐந்தாவது நாளாக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
டெஹ்ரானில், தாக்குதலுக்கு அஞ்சி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உலகின் கவனம் முழுவதும் ஈரான் மீது திரும்பியிருந்தாலும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உதவித் தளத்திற்கு அருகில் ஏராளமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.







