காசாவில் யாருக்கும் உதவி கிடைக்கவில்லை: ஐ.நா சபை
நிலைமை சகிக்க முடியாதது என இங்கிலாந்து அதிருப்தி

காசா, மே.21; இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், காசாவில் இதுவரை உதவி விநியோகிக்கப்படவில்லை என்று ஐ,நா.சபை தெரிவித்துள்ளது.
11 வார முற்றுகைக்குப் பின்னர் உதவி பொருட்களுடன் வந்துள்ள லாரிகள் எல்லையைக் கடக்கத் தொடங்கிய போதிலும், காசாவில் இன்னும் எந்த உதவியும் விநியோகிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
காசாவில் உதவி விநியோகிக்கப்படவில்லை: ஐ.நா.சபை அதிருப்தி

மாவு, குழந்தைகளுக்கா ன உணவு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று (மே.21) 93 லாரிகள் காசாவிற்குள் நுழைந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், கெரெம் ஷாலோம் பாலஸ்தீனப் பகுதியை லாரிகள் அடைந்தபோதிலும், இதுவரை எந்த உதவியும் விநியோகிக்கப்படவில்லை என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
காசாவில் பஞ்சம் ஏற்படும் என உலகளாவிய நிபுணர்கள் எச்சரிக்கை

இஸ்ரேல் அந்தப் பகுதியை அணுக ஒரு குழு பல மணி நேரம் காத்திருந்ததாகவும், ஆனால் “துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் அந்தப் பொருட்களை எங்கள் கிடங்கிற்குள் கொண்டு வர முடியவில்லை” என்று ஐ.நா.சபை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார்.
காசாவில் பஞ்சம் ஏற்படும் என்று உலகளாவிய நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் “அடிப்படை அளவு உணவை” அனுமதிக்க இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை ஒப்புக்கொண்டது.
உதவியை அனுமதிக்காததால் இஸ்ரேல் மீது தொடர் அழுத்தம்

ஆனாலும், உதவியை காசாவிற்குள் அனுமதிக்காத்தால் இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காசாவில் இஸ்ரேலின் “தார்மீக ரீதியாக நியாயப்படுத்த முடியாத” இராணுவ விரிவாக்க நடவடிக்கையால் அந்நாட்டுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது, நிலைமை “சகிக்க முடியாதது” என்று இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறியிருக்கிறார்.
இஸ்ரேல் உடனான வர்த்தக ஒப்பந்தம் மறுபரிசீலனை: ஐரோப்பிய ஒன்றியம்
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேலுடனான அதன் வர்த்தக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் என்று கூறினார்.







