‘பெஸ்ட் ஃபினிஷர்’ மைக்கேல் பெவனுக்கு கௌரவம்
ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றார்

சிட்னி, பிப்.03; ஒருநாள் போட்டிகளில் ஆட்டத்தை முடித்து வைப்பதில் வல்லவர் எனப் போற்றப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கல் பெவன் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.
உலகின் தலைசிறந்த ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுபவர், முன்னாள் வீரர் மைக்கேல் பெவன்.
கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் மைக்கேல் பெவன்

“கிரிக்கெட் இதுவரை கண்டிராத (best finishers) ஆட்டத்தை முடித்து வைப்பதில் சிறந்த வீரர்களில் ஒருவரான முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்ததற்கு வாழ்த்துகள்” என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
மைக்கேல் பெவன் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,912 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 53.58 ஆகும்.
நெருக்கடியின்போது சிறந்த தருணங்களை உருவாக்கியவர்

போட்டிகளின் போது கடும் நெருக்கடியான தருணங்களில் ரசிகர்களின் மனதில் பதியக்கூடிய வகையிலான தருணங்களையும் நினைவுகளையும் உருவாக்குவதில் மாஸ்டராக கருதப்படுவர், மைக்கேல் பெவன்.
ஆஸ்திரேலிய அணி 1999 மற்றும் 2003 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் கோப்பையை வெல்ல பெவன் சிறந்த பங்களிப்பை வழங்கியவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் 66வது வீரராக மைக்கேல் பெவன் இடம்பிடித்துள்ளார்.
பெருமகிழ்ச்சி வெளியிட்டுள்ள மைக்கேல் பெவன்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஹால் ஆஃப் பேமில் சேர்க்கப்பட்டது குறித்து பெருமகிழ்ச்சி தெரிவித்துள்ள மைக்கேல் பெவன், “நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்; நான் நேசித்த ஒரு விளையாட்டை நான் விளையாடினேன்; ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சகாப்தத்தில் சில அற்புதமான தருணங்களை அனுபவித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸி., கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன?

“ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம்” என்பது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள விளையாட்டு அருங்காட்சியகத்தில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய கேலரி ஆஃப் ஸ்போர்ட் மற்றும் ஒலிம்பிக் மியூசியத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த அருங்காட்சியகம் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை நினைவுகூருகிறது. இது, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு ஆகச்சிறந்த பங்களிப்பை வழங்கிய வீரர்களை கௌரவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.







