14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு
இந்தியா உடனான முதல் டெஸ்ட் ஜூன் 20-ல் தொடக்கம்

லண்டன், ஜூன்.05; இந்தியா உடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் 14 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டனுக்கு மீண்டும் வாய்ப்பு

இதில் பங்கேற்கும் 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியில், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
யாரும் எதிர்பாராத வகையில் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் (Jamie Overton) மீண்டும் அணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.
காயத்திலிருந்து முழுமையாக விடுபட்டாரா என சந்தேகம்

2022 இல் நியூசிலாந்திற்கு எதிரான தனது ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் யாரும் எதிர்பாராத விதமாக 97 ரன்களும் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தார்.
இந்தியா உடனான டெஸ்ட் தொடரில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்ட போதிலும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் சர்வதேச போட்டியின்போது விரலில் முறிவு ஏற்பட்டதால், இந்தியா உடனான முதல் டெஸ்ட்டில் அவர் முழுமையாக உடல் தகுதி பெறுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
முதல் டெஸ்ட் ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது

இந்திய- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20ஆம் தேதி ஹெடிங்லேயில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் களம் காண்கிறது.







