ஐபிஎல் இறுதிப்போட்டி; கோப்பை யாருக்கு?
பெங்களூரு அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கணிப்பு

அகமதாபாத், ஜூன்.03; கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கப்படும், ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இப்போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து செயற்கை நுண்ணறிவு (AI)தளங்களில் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
பெங்களூரு அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என AI கணிப்பு

AI தளங்களான Grok, Gemini மற்றும் ChatGPT போன்றவற்றில் கேட்கப்பட்டது. அந்த மூன்று செயற்கை நுண்ணறிவு தளங்களும் ஒரே அணியையே தேர்ந்தெடுத்துள்ளன.
அதன்படி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம் இருப்பதாக அந்த மூன்று செயற்கை நுண்ணறிவு தளங்களும் கூறுகின்றன.
குவாலிஃபயர் 1 போட்டி ஒரு தலைப்பட்சமாக இருந்தது

குவாலிஃபயர் ஒன்றில் இவ்விரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற போட்டி ஒரு தலைப்பட்சமாக அமைந்து பெங்களூரு அணி வென்ற போதிலும், ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி குவாலிஃபயர் 2-ல் மும்பை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டியில் பெங்களூரு அணிக்கு அதிக வாய்ப்புகள் எனக் கணிக்கப்பட்டாலும், கோப்பையை வெல்ல இது அற்புதமான வாய்ப்பு என்பதால், இரு அணிகளும் முழுவீச்சில் களமிறங்கத் தயாராக உள்ளன.
“பெங்களூரு அணி நிலையாக விளையாடும் தன்மை கொண்டது”

நிலையாக விளையாடும் தன்மை என்ற அடிப்படையில் பார்க்கும் போது, பெங்களூரு அணியின் ஆட்டத்திறனே சற்று மேலோங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
பந்துவீச்சு, பேட்டிங், நெருக்கடிகளை கையாளும் திறன் ஆகியவற்றில் பெங்களூரு அணியின் கை சற்று ஓங்கியிருப்பதாக ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும், பல முன்னாள் வீரர்களும் கூறுகின்றனர்.
பெங்களூரு முதலில் பேட் செய்த 8 ஆட்டங்களில் 6-ல் வெற்றி

அத்துடன் முதலில் பேட் செய்த எட்டு ஆட்டங்களில் ஆறில் பெங்களூரு வென்றுள்ளது. அதேவேளையில், குவாலிஃபயர் 2-ல் மும்பை இண்டியன்ஸ்க்கு எதிராக 203 ரன்களை விரட்டிப் பிடித்த ஸ்ரேயாஸின் ஆட்டம் மீளும் தன்மையைக் காட்டியதாக மற்றொரு தரப்பினர் பேசுகின்றனர்.
இவை எல்லாவற்றையும் மீறி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பரவலாக கணிக்கப்பட்டுள்ளது.







