‘துணை முதலமைச்சர் ஆக எல்லா தகுதிகளும் வாய்ந்தவர் உதயநிதி’

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆவதற்குத் தேவையான அனைத்து தகுதிகளும் வாய்ந்தவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் 50ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.

நிகழ்வுக்கு பின்னர், ஆளுநர் ஆர்.என். ரவியுடன், சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்றது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “சென்னைப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பட்டமளிப்பு விழா மாணவர்கள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசின் முயற்சியால் நேற்று நடத்தப்பட்டது.‌ அதனால் மாணவர்களின் நலன் கருதி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றேன்” எனக் கூறினார்.

தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்ற முதலமைச்சரின் பேட்டி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இது குறித்து முடிவு எடுக்க வேண்டியவர் முதலமைச்சர் தான். என்னைப் பொறுத்தவரை துணை முதலமைச்சர் ஆவதற்கு எல்லா தகுதிகளும் வாய்ந்தவர் உதயநிதி ஸ்டாலின்.‌ ஆனால் அது குறித்து பேசுவதற்கு தமிழிசை யார், குமரி அனந்தன் இல்லையென்றால் அவரை யார் என்றே மக்களுக்குத் தெரியாது.‌ இளமைப் பருவத்தில் இருந்து இந்த இயக்கத்திற்காக உழைத்தவர் உதயநிதி ஸ்டாலின். பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கைகளில் வளர்ந்த உதயநிதி ஸ்டாலின், வருங்காலங்களில் இளைஞர்களின் வழிகாட்டியாக அமைவார்” என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது. அதே போல பாடப்பிரிவுகளுடன் தொழிற் படிப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.‌ மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில் பொறியியல் துறையில் இரண்டு பாடப்பிரிவுகள் மட்டும் தமிழ் வழியாக இருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து பிரிவுகளிலும் தமிழ்வழிக் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்வழியில் புத்தகங்கள் மாற்றம் செய்வதற்கும் உத்தரவிட்டுள்ளார்.‌ உயர்கல்வி, சுகாதாரம் இரு கண்களாக கொண்டு, எண்ணிக்கையை மட்டும் உயர்த்தாமல் தரத்தையும் உயர்த்தும் வகையில் செயலாற்றுபவர் முதலமைச்சர் ஸ்டாலின்” எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மகாராஜன், சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x