ஆஸ்திரேலியாவின் ஜோஷ் இங்கிலிஸ் சாதனை
அறிமுகப் போட்டியில் அதிவேக சதமடித்த 2ஆவது வீரர்

காலே, ஜன.31; டெஸ்ட் கிரிக்கெட்டில், அறிமுகப் போட்டியிலேயே அதிவேக சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் படைத்துள்ளார்.
இங்கிலிஸ், ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்காக 26 ஒருநாள் மற்றும் 29 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
அதிவேக சதம் கண்ட முதல் ஆஸ்திரேலிய வீரர்

இலங்கையில், (Galle) காலேவில் நடைபெற்று வரும் அந்நாட்டு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஜோஷ் இங்கிலிஸ் 5ஆவது வீரராக களமிறங்கினார். அவர், தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து, 51 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
90 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்த இங்கிலிஸ், மேலும் நான்கு பந்துகளை எதிர்கொண்டு 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது சதத்தில் 10 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.
அறிமுக போட்டியில் அதிவேக சதமடித்தவர், ஷிகர் தவான்

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற பெருமை இந்தியாவின் ஷிகர் தவான் வசமுள்ளது.
அவர், கடந்த 2013ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 87 பந்துகளில் சதம் விளாசினார். அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ஜோஷ் இங்கிலிஸ் நூலிழையில் நழுவவிட்டார்.
இதேபோன்று 2004 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகளின் டுவைன் ஸ்மித் 93 பந்துகளில் சதத்தை எட்டினார்.







