கண்ணீருடன் ஓய்வு பெற்றார் நடால்
சர்வதேச டென்னிஸ் தொடர்

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஸ்பெயின் ஜாம்பவான் வீரர் ரபேல் நடால் கண்ணீருடன் ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டில் நடந்த ஏ.டி.பி., தொடர் மூலம், சர்வதேச டென்னிஸ் அரங்கில் காலடி வைத்தார் ரபேல் நடால். கடந்த 24 ஆண்டுகளாக உலக டென்னிஸ் ஆடுகளத்தில், தனக்கென தனி இடத்தை பிடித்த அவர், 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று புதிய வரலாறு படைத்தார். இதன்மூலம் களிமண் தரையில் ஒரு பேரரசனாக பட்டொளி வீசி பறக்கிறார்.

38 வயதான ரபேல் நடால் இதுவரை 63 டென்னிஸ் தொடர்களில், 22 கிராண்ட் ஸ்லாம் கோப்பைகள், 36 மாஸ்டர்ஸ் உட்பட 92 பட்டங்களை வென்று பல்வேறு சாதனைகளைப் படைத்து இருக்கிறார். இதன்மூலம் உலக டென்னிஸ் வரலாற்றில் தமது பெயரை அழுத்தமாக பதிவுச் செய்துள்ளார் ரபேல் நடால்.
இந்நிலையில், தொடர் காயங்கள் காரணமாக, அனைத்து வகையான டென்னிஸ் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்திருந்தார். மேலும் நடப்பு டேவிஸ் கோப்பை தொடருடன், சர்வதேச டென்னிஸ் களத்தில் இருந்து விடை பெறுவேன் எனவும் தெரிவித்திருந்தார்.

நேற்று நடைபெற்ற டேவிஸ் கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் தோல்வி அடைந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமது கடைசி போட்டியில் ஆடிய ரபேல் நடாலும், நெதர்லாந்து வீரர் போடிக்கிடம் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். இதன்மூலம் ஸ்பெயினை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி நெதர்லாந்து அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதையடுத்து ரபேல் நடால் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விடைபெறும் தரூணம் வந்தது. அப்போது நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தொடர்ந்து டென்னிஸ் விளையாடவே விரும்புகிறேன். ஆனால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. டென்னிஸ் இல்லாமல் இருப்பது கடினம் தான். வேறு வழியில்லாததால் இந்த சூழலை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி எதிர்பார்த்ததை விட அதிக ஆண்டுகள் டென்னிஸ் விளையாடியது பெருமையாக உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார் ரபேல் நடால்.

மேலும் என் வாழ்வின் முதல் போட்டியிலும் தோல்வி கண்டேன்; தற்போது கடைசி போட்டியிலும் தோல்வி கண்டுள்ளேன். இதன்மூலம் எமது விளையாட்டு வாழ்வின் வட்டம் பூரணமடைந்திருக்கிறது என நெகழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதுபோன்ற தருணத்தை யாரும் விரும்ப மாட்டார்கள்; எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என கண்ணீருடன் விடை பெற்றார் டென்னிஸ் சக்கரவர்த்தி ரபேல் நடால்.







