சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை வெளியீடு
பிப். 23ல் இந்தியா vs பாக்., துபாயில் மோதல்

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியானது. இதில் பிப். 23ல் பரம் எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் துபாயில் மோத உள்ளன.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பிசிசிஐ அறிவித்தது. இறுதியில் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் ஹைபிரிட் மாடலில் துபாயில் நடத்த முடிவானது.

இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

பிப். 19ல் கராச்சியில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில், வங்கதேசத்தை பிப். 20ல் சந்திக்கிறது. 2-வது லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் பிப். 23-ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது. பின்னர் தமது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை மார்ச் 2ம் தேதி சந்திக்கிறது.

லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், வரும் மார்ச் 4, 5ல் நடக்கும் அரையிறுதியில் விளையாடும். இறுதிப் போட்டி மார்ச் 9ல் பாகிஸ்தானின் லாகூரில் நடக்கும். ஒருவேளை இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அந்த போட்டிகள் துபாயில் நடக்கும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
அட்டவணை
தேதி – பிரிவு – அணிகள் – இடம்
பிப். 19 ஏ பாகிஸ்தான்-நியூசிலாந்து கராச்சி
பிப். 20 ஏ இந்தியா-வங்கதேசம் துபாய்
பிப். 21 பி ஆப்கானிஸ்தான்-தென் ஆப்ரிக்கா கராச்சி
பிப். 22 பி ஆஸ்திரேலியா-இங்கிலாந்து லாகூர்
பிப். 23 ஏ இந்தியா-பாகிஸ்தான் துபாய்
பிப். 24 ஏ வங்கதேசம்-நியூசிலாந்து ராவல்பிண்டி
பிப். 25 பி ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா ராவல்பிண்டி
பிப். 26 பி ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து லாகூர்
பிப். 27 ஏ பாகிஸ்தான்-வங்கதேசம் ராவல்பிண்டி
பிப். 28 பி ஆப்கானிஸ்தான்-ஆஸ்திரேலியா லாகூர்
மார்ச் 1 பி இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா கராச்சி
மார்ச் 2 ஏ இந்தியா-நியூசிலாந்து துபாய்
மார்ச் 4 முதல் அரையிறுதி- துபாய்
மார்ச் 5 இரண்டாவது அரையிறுதி லாகூர்
மார்ச் 9 இறுதிப் போட்டி லாகூர்/துபாய்
* போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு துவங்கும்.
* அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு ‘ரிசர்வ் டே’ உண்டு.








