இந்தியாவுக்கு எதிரான T20,ODI தொடர்
சாம்பியன்ஸ் டிராபிக்கும் இங்கி., அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான T20, ODI மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களுக்கு, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கு அதிரடி வீரர் ஜோ ரூட் திரும்பி இருக்கிறார்.

இந்தியா சுற்றுப்பயணத்தில் 5 ‘டி-20’ போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்கு இங்கிலாந்து அணி வருகிறது. அதன்பின்பு பாகிஸ்தானில் நடக்கவுள்ள ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியில் (2025, பிப். 19 – மார்ச் 9) விளையாடுகிறது . இந்த 3 தொடர்களுக்கும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

இதில் ஒருநாள் தொடருக்கான அணியில் ஜோ ரூட் மீண்டும் இடம் பெற்றுள்ளார். 14 மாதங்களுக்கு பின்பு ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்க உள்ளார். கடைசியாக கோல்கட்டா ஈடன் கார்டனில் 2023-ல் நடந்த ஐ.சி.சி., உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார் ஜோ ரூட். டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டதால் மீண்டும் ஒருநாள் போட்டிக்கு அவர் திரும்பி இருக்கிறார்.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் காயமடைந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான ‘லெக்-ஸ்பின்னர்’ ரெஹான் அகமது ‘டி-20’ போட்டிக்கு மட்டும் தேர்வாகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் விலகிய ஹாரி புரூக், மீண்டும் 2 அணிகளிலும் இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பென் டக்கெட், அட்கின்சன், பில் சால்ட், பெத்தெல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லிவிங்ஸ்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் உட், சாகிப் மஹ்மூத், ஜோ ரூட் (ஒருநாள் போட்டி மட்டும்), ரெஹான் அகமது (‘டி-20’ போட்டி மட்டும்).








