தமிழ்நாடு இமாலய வெற்றி
விஜய் ஹசாரே டிராபியில் காஷ்மீர் படுதோல்வி
விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரில் ஜம்மு காஷ்மீர் அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தமிழ்நாடு இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரின் (‘லிஸ்ட் ஏ’) 31வது சீசன் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 38 அணிகள், 5 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. நேற்று விஜயநகரில் நடந்த’டி’ பிரிவு லீக் போட்டி ஒன்றில், தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற காஷ்மீர் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
தமிழக அணியின் துஷார் ரஹேஜா (7), பிரதோஷ் (7) ஏமாற்றினர். அடுத்து ஜோடி சேர்ந்த ஜெகதீசன் – பாபா இந்திரஜித் இணை விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி 170 ரன்கள் சேர்த்தது. இதில் அபாரமாக ஆடிய ஜெகதீசன் அதிரடி சதம் கடந்து, 147 பந்துகளில் 165 ரன்கள் குவித்தார். பாபா இந்திரஜித் 78 ரன்கள் விளாசினார். பின்னர் விஜய் சங்கர் (25), முகமது அலி (37*) கைகொடுக்க, 50 ஓவரில் 353 /6 ரன்கள் குவித்தது தமிழ்நாடு அணி.
354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய காஷ்மீர் அணிக்கு, ஷுபம் கஜுரியா (45), அப்துல் சமத் (25), ஆகூப் நபி (38) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற 36.3 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது காஷ்மீர். இதன்மூலம் 191 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது வெற்றியை தமிழ்நாடு அணி பதிவு செய்தது. தமிழகம் சார்பில் அச்யுத் 6, விஜய் சங்கர், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை தமிழகத்தின் அச்யுத் தட்டிச் சென்றார்.







