ரஞ்சி கோப்பையில் அன்ஷுல் காம்போஜ் சாதனை
ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் சாய்த்தார்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹரியானாவின் அன்ஷுல் காம்போஜ், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ஹரியானாவின் ரோதக் நகரில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சி’ பிரிவு லீக் போட்டியில், கேரளா – ஹரியானா அணிகள் மோதின. முதலில் ஆடிய கேரளா அணி முதல் இன்னிங்சில் 291 ரன்கள் எடுத்தது. இதில் தமது வேகப்பந்தில் மிரட்டிய ஹரியானா வீரர் அன்ஷுல் காம்போஜ், கேரளாவின் 10 விக்கெட்டுகளையும் சாய்த்தார். மொத்தம் 30.1 ஓவர்கள் வீசிய அவர், 49 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து எதிர் அணியின் 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரது பந்துவீச்சில் 9 மெய்டன் ஓவர்களும் அடங்கும்.
இதன்மூலம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில், ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய 3வது பவுலரானார் அன்ஷுல் காம்போஜ். ஏற்கனவே பெங்காலின் பிரேமாங்ஷு சாட்டர்ஜி (10/20, எதிர்: அசாம், 1956), ராஜஸ்தானின் பிரதீப் சுந்தரம் (10/78, எதிர்: விதர்பா, 1985) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். தற்போது அந்தப் பட்டியலில் அன்ஷுல் காம்போஜ்-ம் இணைந்துள்ளார்.







