ஈரோடு அருகே ஒற்றை யானை மிதித்து பெண் உயிரிழப்பு
வனப்பகுதியில் நடந்து சென்றபோது நிகழ்ந்த பரிதாபம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒற்றை யானை தாக்கி உயிரிழந்தார்.
நேற்றிரவு (டிச.22) லட்சுமி என்ற பெண், தனது கணவர் பாலன் மற்றும் உறவினர்களுடன் ஒரு குழுவாக கோத்தகிரி வனப்பகுதிக்கு அருகே உள்ள காட் ரோடு வழியாக தெங்குமரஹாடாவுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாலன் உள்ளிட்டோர் முன்னே சென்று கொண்டிருக்க லட்சுமி பின்னால் வந்து கொண்டிருந்தார். அச்சமயம் புதரிலிருந்து வெளியே வந்த ஒற்றை யானை லட்சுமியை தாக்கியது. இதில் அப்பெண் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணம்

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த பவானிசாகர் வனத்துறையினர், லட்சுமியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஈரோடு மாவட்ட மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.







