தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
இன்று 3வது டி-20 கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் சஞ்சு சாம்சன் அபார சதம் அடித்து, தனது திறமையை நிரூபித்தார்.சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால், இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் 2 போட்டிகளின் முடிவில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால், இந்த தொடர் 1-1 என்ற சமநிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் 3-வது டி-20 போட்டி, செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில், இன்றிரவு 8.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில், முந்தைய போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா களமிறங்க உள்ளது. தற்போதைய அணியில், பாண்டியாவை தவிர மற்றவர்கள் இம்மைதானத்தில் விளையாடியது இல்லை. இங்கு பந்துகள் அதிகம் பவுன்ஸ் ஆகும் என்பதால், இந்திய பேட்டர்கள் சுதாரித்து விளையாடுவது மிகவும் அவசியம்.
அதே வேளையில் சொந்த மண்ணில் டி-20 தொடரை வெல்லும் ஆவலில், தென் ஆப்பிரிக்க அணியும் தீவிரமாக இருக்கிறது. அவ்வணியின் கேப்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், கிளாசன் உள்பட நட்சத்திர பேட்டர்கள் சோபிக்காதது பலவீனம். இதனை மாற்றிக்கொண்டு தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிரடியாக விளையாட வேண்டியது அவசியம்.
நடப்புத் தொடரை வெல்வதற்கு இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டியது 2 அணிகளுக்கும் அவசியம் என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலில் காத்திருக்கின்றனர். இதனால் இந்த ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.







