பிசிசிஐ செயலாளராகும் முன்னாள் அமைச்சர் மகன்
ரோகன் ஜெட்லி தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல்

பிசிசிஐ செயலாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன், ரோகன் ஜெட்லி தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன், ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியின் தலைவராக, கடந்த மாதம் தேர்வானார். அவர், அடுத்த மாதம் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதனால் பிசிசிஐயின் அடுத்த செயலாளர் யார்? என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த பதவிக்கு ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா, ஒன்றிய முன்னாள் அமைச்சர் அனுராக் தாகூரின் தம்பி அருண் துமால் மற்றும் மறைந்த பாஜக தலைவர் அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில், டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள ரோகன் ஜெட்லி, பிசிசிஐ-ன் அடுத்த செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







