2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் மொத்தம் 574 வீரர்கள்
இறுதிப் பட்டியல் வெளியீடு

2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
2025-ம் ஆண்டிற்கான ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில், வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அடுத்த ஐபிஎல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும், தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.
இந்நிலையில் ஏலத்திற்கு முதற்கட்டமாக 1,165 இந்தியர்கள், 409 வெளிநாட்டவர் என மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர். இதனிடையே பதிவு செய்யப்பட்ட 1574 வீரர்களின் எண்ணிக்கையை தற்போது 574 ஆக குறைத்து இறுதிக்கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தற்போது 10 ஐபிஎல் அணிகளும், மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டி இருக்கிறது. அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்ட பட்டியல் விவரம்:
கேப்டு இந்திய வீரர்கள் – 48
கேப்டு வெளிநாட்டு வீரர்கள் – 193
இணை நாட்டு வீரர்கள் – 3
அன்கேப்டு இந்திய வீரர்கள் – 318







