இந்தியா மீண்டும் சாம்பியன்
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர்

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில், சீனாவை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர், பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.
இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இதனடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடித்த இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் முதல் அரையிறுதியில் மலேசியாவை வீழ்த்திய சீனாவும், மற்றொரு அரையிறுதியில் ஜப்பானை சாய்த்த இந்தியாவும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
நேற்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், ஆரம்பம் முதலே இந்திய மகளிர் அணியினர் அபாரமாகச் செயல்பட்டனர். ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை தீபிகா சிறப்பான ரிவர்ஸ் ஹிட் கோல் அடித்து அசத்தினார். இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 3ஆவது முறையாக மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்தியா.
இதன்மூலம் அதிக முறை ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற தென் கொரியாவின் (3 முறை) சாதனையை இந்தியா சமன் செய்திருக்கிறது. மேலும் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்திய அணி, 2016, 2023-ம் ஆண்டுகளைத் தொடர்ந்து, தற்போது 3-வது முறையாக மகளிர் ஆசிய சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இறுதியில் நடந்த பரிசளிப்பு விழாவில், இந்தியாவுக்குத் தங்கம், சீனாவுக்கு வெள்ளி, ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.







