அரையிறுதியில் நுழைந்த இந்தியா
ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்

ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் யு.ஏ.இ., அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி இருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சில், (யு.ஏ.இ.,) ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் (19 வயது) 11வது சீசன் நடைபெறுகிறது. நேற்று சார்ஜாவில் நடந்த ‘ஏ’ பிரிவு கடைசி லீக் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியாவை எதிர்த்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) மோதியது. இதில் டாஸ் வென்ற யு.ஏ.இ., அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஆரம்பம் முதலே இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் யு.ஏ.இ., வீரர்கள் பெவிலியன் திரும்பிய வண்ணம் இருந்தனர். அதிகபட்சமாக முகமது ராயன் (35), அக்சத் ராய்(26) ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் யு.ஏ.இ., அணி, 44 ஓவரில் 137 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் யுதாஜித் குஹா 3, சேட்டன் சர்மா 2, ஹர்திக் ராஜ் 2 விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய இந்தியாவுக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான 13 வயது வைபவ் சூர்யவன்ஷி – ஆயுஸ் மாட்ரே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சிக்சர், பவுண்டரி மழை பொழிய 16.1 ஒவரிலேயே இந்தியா விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சூர்யவம்ஷி 76, ஆயுஸ் 67 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

நாளை நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து வங்கதேசமும், 2-வது அரையிறுதிப் போட்டியில் இலங்கையுடன் இந்தியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.







