கெஜ்ரிவாலின் ரூ.3.75 கோடி ஆடம்பர பங்களா..?
வீடியோ வெளியிட்டு பாஜக கிண்டல்

டெல்லி: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் பங்களா தொடர்பான வீடியோ விவகாரத்தில் பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது முதல் அவர் மீது பாஜக கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது. மக்களின் வரிப்பணத்தில் கெஜ்ரிவால் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக பாஜக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, கெஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் பங்களா தொடர்பான வீடியோ ஒன்றை டெல்லி மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆம் ஆத்மியை கிண்டலடிக்கும் வகையிலான பாடலுடன் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மார்பிள் கிரானைட்டுடன் கூடிய விளக்குகள், உடற்பயிற்சிக் கூடம், அழகு நிலையம், சொகுசு சோபாக்கள் என பல ஆடம்பர வசதிகளுடன் கூடியதாக அந்த பங்களா அமைந்துள்ளது.
₹3.75 கோடிக்கு ஆடம்பர பங்களா?
கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ முதலமைச்சர் இல்லத்தில் இவற்றையெல்லாம் பொருத்துவதற்கு ₹3.75 கோடி செலவிடப்பட்டதாக, வீரேந்திர சச்தேவா விமர்சித்துள்ளார்.
சாதாரண மனிதர் என தன்னை அடிக்கடி கூறிக்கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால், எவ்வளவு ஆடம்பரமான பங்களாவில் வசித்துள்ளார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோவை வெளியிடுவதாகவும் சச்தேவா தெரிவித்திருக்கிறார்.
கெஜ்ரிவால் வசித்த பங்களாவை ‘ஊழல் அரண்மனை‘ என்றும், மக்களின் வரிப்பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி கெஜ்ரிவால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருப்பதாகவும் வீரேந்திர சச்தேவா சாடியுள்ளார்.
வீடியோ விவகாரத்திற்கு பதிலடி கொடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பாஜக கையாளும் தந்திரம் இதுவென்று குற்றஞ்சாட்டி உள்ளது.







