வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள்
நடவடிக்கை எடுக்க ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்

டெல்லி: வங்க தேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.
வங்க தேசத்தில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்ததை அடுத்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக இந்துக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வங்கதேச இஸ்கான் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சில இந்துக் கோவில்களும் தாக்கப்பட்டன.
வங்கதேச சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தவறிவிட்டதை அனைத்து நாடுகளும் கண்டிக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான சுனில் அம்பேத்கர், இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்களைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்துக்களை குறிவைத்து நடத்தப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நரேந்திர மோடி அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சமூகத்தைப் பாதுகாக்கவும் நீதியை உறுதிப்படுத்தவும் உடனடியாக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுனில் அம்பேத்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேச்சுவார்த்தையில் பலன் கிட்டவில்லை எனில், மாற்று நடவடிக்கைகள் ஆராயப்பட வேண்டும் என்று சுனில் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.







