டங்ஸ்டன் சுரங்க மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது திமுக தரப்பில் எந்த எதிர்ப்பும் பதிவு செய்யப்படவில்லை என, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
மதுரை மேலூர் அருகே, அரிட்டாபட்டி சிற்றூரில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய சுரங்கத் துறை வழங்கிய ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்று, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.
மசோதாவை திமுக எதிர்க்கவில்லை

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசு நிகழ்ச்சியில் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அரசின் தவறை மறைக்கும் விதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு இருந்ததாக விமர்சித்துள்ளார்.
சுரங்கம் அமைந்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து மக்களுக்கு தெரிவிக்காமல் திமுக அரசு மறைத்ததாகவும், அவர் குற்றஞ்சாட்டினார். மக்கள் கொதித்து எழுந்த பிறகு தான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக அரசு கடிதம் எழுதியதாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது சரியான வாதத்தை தான் முன் வைத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
டங்ஸ்டன் சுரங்க மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது திமுக தரப்பில் எந்த எதிர்ப்பும் பதிவு செய்யவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.






