211 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியா அபாரம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 211 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை இந்திய மகளிர் அணி பதிவு செய்துள்ளது.

இந்தியா சுற்றுப்பயணத்தில் 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி பங்கேற்கிறது. இதில் முதலில் நடந்த டி-20 தொடரை 2-1 என இந்திய மகளிர் அணியினர் கைப்பற்றினர். இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. இதில் மேற்கிந்திய தீவுகள் ‘டாஸ்’ வென்று முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு அறிமுக வீராங்கனை பிரதிகா ராவல் – ஸ்மிருதி மந்தனா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்திருந்த போது பிரதிகா (40) அவுட்டானார். அபாரமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 102 பந்தில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்லீன் தியோல் (44), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (34), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (31), ரிச்சா கோஷ் (26) சிறப்பாக ஆடியதால், 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 314 ரன்களை இந்தியா குவித்தது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஜைதா ஜேம்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே விக்கெட்டை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர். கேப்டன் ஹேலி மேத்யூஸ் (0), கியானா ஜோசப் (0), ரஷாதா வில்லியம்ஸ் (5), டீன்டிரா டாட்டின் (8) ஏமாற்றினர். ஷெமைன் (21), ஆலியா (13), அபி பிளட்சர் (24*) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற மேற்கிந்திய தீவுகள் 26.2 ஓவரில் 103 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் ரேணுகா சிங் 5, பிரியா மிஷ்ரா 2 விக்கெட் சாய்த்தனர். 

இதன்மூலம் 211 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்த இந்திய மகளிர் அணி, நடப்புத் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. ஆட்ட நாயகி விருதை ரேணுகா சிங் தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தனது 2வது சிறந்த வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 2017ல் அயர்லாந்து அணியை 249 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x