செய்தியாளர்கள் சந்திப்பில் ஹிந்தியில் பேட்டி
ஜடேஜாவால் கைவிடப்பட்ட கிரிக்கெட் போட்டி

செய்தியாளர்கள் சந்திப்பில் ஆங்கிலத்தில் பதிலளிக்க மறுத்து ஹிந்தியில் மட்டும் ஜடேஜா பதில் சொல்வதாக ஆஸ்திரேலிய ஊடகத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் எழுந்த சர்ச்சையால், இரு நாட்டு ஊடகத்தினர் இடையே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட ‘ பார்டர் – கவாஸ்கர்’ டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட், ‘பாக்சிங் டே’ போட்டியாக டிச.,26ம் தேதி துவங்குகிறது. இதற்காக மெல்போரினில் இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு முன்பு இரு நாட்டு ஊடகத்தினர் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து இருந்தது.

இதற்காக சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஊடகத்தினரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் எழுப்பினர். அவற்றுக்கு ஜடேஜா ஹிந்தியில் பதிலளித்ததாக தெரிகிறது. இது புரியாததால் ஆங்கிலத்தில் பதிலளிக்கும்படி ஆஸி., ஊடகத்தினர் எடுத்து கூறியும், அதனை ஏற்காமல் தொடர்ந்து ஹிந்தியிலேயே ஜடேஜா பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடும் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, இரு நாட்டு ஊடகத்தினர் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் விளையாட பெயர் கொடுத்திருந்த இந்திய ஊடகத்தினர் ஒருவர் பின்பு ஒருவராக விலகினர். இதனையடுத்து செய்தியாளர்கள் இடையே ஏற்பாடு செய்திருந்த காட்சி கிரிக்கெட் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.








