“வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்வது அர்த்தமற்றது”
நாராயண மூர்த்தியின் யோசனை: கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு

சென்னை: இந்தியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்த யோசனை அர்த்தமற்றது என்று, சிவகங்கை காங்கிரஸ் எம்.பி.,கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
கடந்தாண்டு நாராயணமூர்த்தி அளித்த பேட்டி ஒன்றில், “இந்தியாவின் உற்பத்தி திறன் மிகக்குறைவாக உள்ளது. இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். உற்பத்தி திறனை மேம்படுத்தாத வரை, ஊழல்களை குறைக்காத வரை, வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது. எனவே அடுத்த 20 முதல் 50 ஆண்டுகளுக்கு இளைஞர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
வாரத்தில் 70 மணி நேர வேலை

அண்மையில் மும்பையில் நடைபெற்ற CNBC எனப்படும் Consumer News and Business Channel அமைப்பின் குளோபல் லீடர்ஷிப் உச்சி மாநாட்டிலும் நாராயணமூர்த்தி இதே கருத்தை வலியுறுத்தினார்.
அப்போது பேசிய அவர், பணியாளர்கள் வாரத்தில் 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். வேலை- வாழ்க்கை சமநிலையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இது இந்தியாவின் வளர்ச்சிக்கும் உலக அரங்கில் போட்டி போடுவதற்கும் அவசியம் என்று தான் நம்புவதாக நாராயணமூர்த்தி பேசினார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.
70 மணி நேர வேலை அர்த்தமற்றது

இதுபோன்ற சூழலில், நாராயண மூர்த்தியின் பரிந்துரை குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், “நீண்ட நேரம் வேலை செய்வது அர்த்தமற்றது, செயல்திறனில் கவனம் செலுத்த வேண்டும். அன்றாட வாழ்க்கை ஒரு போராட்டம், திறமையற்ற மற்றும் தரமற்ற உள்கட்டமைப்பு வசதிகளுடன் நமது சமூகம்போராடுகிறது என கார்த்தி சிதம்பரம் எம்பி குறிப்பிட்டுள்ளார்.






