மினி நியூஸ்

  • யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக் கோரிக்கை

    சென்னை: யுஜிசி நெட் தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றக் கோரி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு நடத்தக்கூடாது என வலியுறுத்தி இருக்கிறார். வரும் ஜனவரி 14-ல் யுஜிசி நெட் தேர்வு நடத்த ஒன்றிய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி 14 முதல் 16 வரை தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார். ஏற்கனவே இதே காரணத்துக்காக சி.ஏ. தேர்வு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.. எனவே யு.ஜி.சி. நெட் தேர்வை 16-ம் தேதிக்கு பிறகு மாற்றி அமைக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • திபெத்தில் நிலநடுக்கம்; 50-க்கும் மேற்பட்டோர் பலி

    திபெத், ஜன.7;  62 பேர் காயமடைந்தனர். 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக சீனா பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர் நிகழ்ந்த பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவிலும் உணரப்பட்டது. அங்கு கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.    

  • சாம்பியன்ஸ் கோப்பை தொடர்; ரோகித் சர்மா கேப்டன்?

    டெல்லி, ஜன.7 ; சாம்பியன்ஸ்கோப்பை தொடரில், இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து விடுபடும் பட்சத்தில், அவர் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலியா தொடரில், இந்தியா வென்ற ஒரே டெஸ்ட் போட்டியில், அணிக்கு தலைமை ஏற்றிருந்தவர் பும்ரா என்பது நினைவுகூரத்தக்கது.  

  • “உ.பி., மகாகும்பமேளாவை சீர்குலைப்போம்”

    பஞ்சாப், ஜனவரி 6 ; உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் மகா கும்பமேளாவை சீர்குலைப்போம் என்று, தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார். வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “இந்துத்துவா சித்தாந்தத்தை சிதைக்க தயங்க மாட்டோம்” என்று எச்சரித்துள்ளார். லக்னோ மற்றும் பிரயாக்ராஜ் விமான நிலையங்களில் காலிஸ்தானி மற்றும் காஷ்மீரி கொடிகளை உயர்த்திப் பிடிக்கும்படி அவர் தனது ஆதரவாளர்களை வலியுறுத்தினார். “பிரயாக்ராஜ் மகாகும்பமேளா ஒரு போர்க்களமாக மாறும்” என்றும் பன்னுன் அறிவித்துள்ளார்.  

  • கர்நாடகாவில், ஒப்பந்தங்களில் 60% ஊழல்: குமாரசாமி

    பெங்களூரு, ஜன.6 ; கர்நாடகாவில், ஒப்பந்தங்களில் 60 விழுக்காடு ஊழல் நடப்பதாக மத்திய உருக்குத்துறை அமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கமிஷன் தொகை அதிகரித்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர்களே கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டதாக குமாரசாமி குற்றம் சாட்டினார். ஆனால், “அவர்கள் எல்லாவற்றையும் சரிசெய்துவிட்டார்கள்,” என்று குமாரசாமி கூறினார், இதனை மறுத்துள்ள முதலமைச்சர் சித்தராமையா, ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா என்று சவால் விடுத்துள்ளார்.    

  • மென் பொறியாளர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கு

    பெங்களூரு, ஜன. 6; பெங்களூரு மென் பொறியாளர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில், அவரது மனைவி நிகிதா சிங்கானியாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கில் உள்ள முதன்மையான ஆதாரங்களை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், விசாரணையில் உள்ள குறைபாடுகள் குறித்தும் கவலைகளை எழுப்பியது. முன்னதாக, உயிரை மாய்த்துக் கொள்ளும் முன்னர் அதுல் சுபாஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தில், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கடுமையாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.  

  • உ.பி.யில், 24 வயதே நிரம்பிய செய்தியாளர் தற்கொலை

    உன்னாவ், ஜன.6 ; உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், 24 வயதே நிரம்பிய சுபம் சுக்லா என்ற செய்தியாளர் தற்கொலை செய்து கொண்டார். யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திவரும் அவர், தனது வீட்டின் அருகே இ -3 சக்கர மிதிவண்டியின் சார்ஜிங் பாயிண்ட்டாகப் பயன்படுத்தப்படும் அறையில் தூக்கிய தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பாஜகவின் கவுன்சிலர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட சில மாதங்களுக்குப் பின்னர் சுக்லா கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.    

  • கும்பமேளாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பிரயாக்ராஜ், ஜன.6 ; உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், வரும் 13ஆம் தேதி தொடங்கவிருக்கும் கும்பமேளாவில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்த பீகாரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான். பீகார் மாநிலம் பூர்ணியாவைச் சேர்ந்த அந்த மாணவன், தனது வகுப்பு தோழர் ஒருவரின் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி, அதிலிருந்து ஆத்திரமூட்டும் பதிவை வெளியிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. உத்தரப்பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்ட அந்த மாணவன், தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.    

  • நடிகர் பிரபுவுக்கு திடீரென அறுவை சிகிச்சை..?

    சென்னை, ஜன.6 ; நடிகர் பிரபுவுக்கு திடீரென அறுவை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் பிரபுவுக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது வீடு திரும்பியிருக்கும் பிரபுவை அவரது குடும்பத்தினர் அருகிலிருந்து கவனித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபுவுக்கு திடீரென நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.    

  • ஃபிட்னஸ் மன்னன் விஷாலுக்கு உடல்நலம் பாதிப்பா?

    சென்னை, ஜன. 6; திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில், நடிகர் விஷாலுக்கு கைகள் நடுங்கியதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ள மதகதராஜா படம் 12 ஆண்டுகள் கழித்து திரைக்கு வருகிறது. அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய விஷால், மைக்கை பிடிக்க முடியாமல் சிரமப்பட்டார். அவரது கைகள் நடுங்கன. பேச்சும் சரிவர புரியவில்லை. எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் விஷாலுக்கு என்னவானது என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.  

Back to top button