இளம் இந்தியா ஏமாற்றியது
ஆசியக் கோப்பையை வென்றது வங்கதேசம்

ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், (யு.ஏ.இ.,) ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் (19 வயது) 11வது சீசன் நடைபெற்றது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் தகுதி பெற்றன. நேற்று துபாயில் நடந்த பைனலில் ‘டாஸ்’ வென்ற இந்தியா முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இதில் சீரான இடைவெளியில் வங்கதேச வீரர்கள் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர். இருப்பினும் ரிசான் ஹொசான் (47), முகமது ஷிஹாப் ஜேம்ஸ் (40), பரித் ஹசன் (39) கைகொடுக்க, வங்கதேசம் 49.1 ஓவரில் 198 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் யுதாஜித் குஹா, சேட்டன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

198 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்தடுத்து அரைசதம் விளாசி, சூப்பர் பார்மில் இருந்த 13 வயது வைபவ் சூர்யவன்ஷி (9) அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஆன்ட்ரி சித்தார்த் (20), கார்த்திகேயா (21), கேப்டன் முகுமது அமான் (26), ஹர்திக் ராஜ் (24) ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட்டாக ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இறுதியில் 35.2 ஓவரில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இளம் இந்திய அணியினர் ஏமாற்றம் அளித்தனர். இதன்மூலம் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய வங்கதேசம் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2வது முறையாக (2023, 2024) சாம்பியன் கோப்பையை வென்று சாதித்தது. வங்கதேசம் தரப்பில் இக்பால் ஹொசைன் எமன், அஜீசுல் ஹக்கீம் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதுவரை 8 முறை ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி முதன்முறையாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வங்கதேசத்தின் இக்பால் ஹொசைன் எமன் தட்டிச் சென்றார்.







