மெரினாவில் விமானக் குழுவின் சாகச ஒத்திகை

இந்திய விமானப்படையின் 72வது ஆண்டு விழாவை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் சாகச நிகழ்ச்சிக்கான முதற்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நேற்று மெரினாவில் நடைபெற்றது. இந்தியாவின் அதிநவீன விமானங்கள் முதல் பாரம்பரிய விமானம் வரை பல்வேறு விமானங்கள் முதற்கட்ட ஒத்திகையில் பங்கேற்றன. இந்தியாவின் சாரங், சூரிய கிரண் விமானக் குழுவின் சாகச ஒத்திகை பார்வையாளர்களைக் கவர்ந்தது. சூரிய கிரண் குழுவினர் வானில் இதய வடிவில் விமானத்தை இயக்கி அசத்தியதைக் கண்ட பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
இந்திய விமானப்படையின் 72ஆவது ஆண்டு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6 தேதி இந்திய விமானப்படையின் 72 விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளன. இதற்கான முதற்கட்ட ஒத்திகை நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நண்பகல் 1 மணியிலிருந்து 3 மணி வரை நடைபெற்றது. இதில் முதலில் m17v5 இரண்டு ஹெலிகாப்டர்களில் விமானப்படை வீரர்கள் வானில் இருந்து கயிறு வழியாக தரையிறங்கி எதிரிகளிடம் சண்டையிட்டு எதிரிகளை சிறை பிடிப்பது போன்ற காட்சிகளை ஒத்திகை செய்து காண்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் புயல் வேகத்தில் செல்லக்கூடிய விமானமான ரபேல் விமானம், மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் உள்ளிட்ட பல்வேறு விமானங்கள் என அதிநவீன விமானங்கள் முதல் பாரம்பரிய விமானங்கள் வரை பல விமானங்கள், முதற்கட்ட ஒத்திகையில் வானில் வட்டமிட்டும், தனித்தனி குழுவாகப் பிரிந்தும் தனுஷ் ஃபார்மேஷன், ஜாகுவார் v3 ஃபார்மேஷன், கார்த்திகேயன் ஃபார்மேஷன், மரின ஃபார் மேசான் உள்ளிட்ட முறைகளில் வானில் பறந்து ஒத்திகை மேற்கொண்டன.
இதனையடுத்து, இந்தியாவின் சிறந்த சாகசங்களை நிகழ்த்தும் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரும், அதே போன்று சூரிய கிரண் விமான குழுவினரும் வானில் பறந்து மூவர்ணக் கொடியினை உருவாக்கியும், இதய வடிவிலாக விமானத்தை இயக்கியும், நேருக்கு நேர் ஒவ்வொரு விமானமும் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வது போன்று அதிவேகமாக இயக்கியும் ஒத்திகை மேற்கொண்டன. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த முதற்கட்ட ஒத்திகையை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதனைத் தொடர்ந்து அக்டோபர் இரண்டாம் தேதியான இன்று இரண்டாம் கட்ட ஒத்திகையும், அக்டோபர் 4 ஆம் தேதி இறுதி ஒத்திகையும் மெரினாவில் நடைபெற இருப்பதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற முதற்கட்ட ஒத்திகையைக் கண்டு ரசித்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் மிகவும் அருமையாக இருந்ததாகவும் இதற்கு முன்னால் இதுபோன்று சாகச நிகழ்சிகளைக் கண்டதில்லை எனவும் பாராட்டுகளை தெரிவித்தனர்.







