இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் – பேரறிஞர் அண்ணா

காஞ்சிபுரத்தில் நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் 1909, செப்.15ம் தேதி பிறந்த அண்ணாதுரை, அறிஞர் அண்ணா என தமிழ்நாடு மக்களால் போற்றி அழைக்கப்பட்டார்.
அரசியல் தலைவர், தமிழ்நாடு முதல்வர் என்பதை எல்லாம் தாண்டி தனது மொழிப்புலமைக்காக பெயர்பெற்றவர். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் சொற்பொழிவாற்றும் அளவிற்கு திறன் கொண்டிருந்தவர் அண்ணா.
அண்ணாவின் சொல்லாற்றலும், எழுத்தாற்றலும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தன. மணிக்கணக்கில், அடுக்குமொழியில் மடைதிறந்ததுபோல பேசுவதில் வல்லவரான இவர், 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அண்ணா முதல்வரானார்.
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை, தமிழ்நாட்டில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு , ‘சத்யமேவ ஜெயதே’ என்பதை ‘வாய்மையே வெல்லும்’ என தமிழில் மாற்றியது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையை, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாகம் என பெயர் மாற்றியது என தான் முதல்வராக இருந்த இரண்டே ஆண்டுகளில் அரசியல் களத்தில் வரலாறு படைத்தவர் பேரறிஞர் அண்ணா.

தனது கதைகள், திரைக்கதைகள், பொன்மொழிகள் மூலம் தமிழ் மொழிக்கு பெரும்பங்கை ஆற்றியுள்ள அண்ணாவின் சிறந்த பொன்மொழிகள் சிலவற்றை இந்த தொகுப்பில் காணலாம்
1. போட்டியும், பொறாமையும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.
2. பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்த பிறகு மனிதனிடம் வாதிடுவது, செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.
3. எதிரிகள் தாக்கி தாக்கி வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்
4. விதியை நம்பி, மதியை பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு.
5. ஜாதிகள் இருந்தே ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் உலகம் எவ்வழி செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள்.
6. சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்து விட முடியும் என்று நினைக்காதீர்கள். ஒரு சாமானியன் படிப்பறிவு இல்லாது இருக்கலாம். ஆனால் வளமான பொது அறிவு பெற்று இருக்கிறான். எது வெண்ணெய், எது சுண்ணாம்பு என்று வித்தியாசம் கண்டறிய அவனுக்கு தெரியும்.
7. பல திறம்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்தோர் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்த களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.
8. நமக்கென்ன என்று கூறும் சுயநலமிகளும், நம்மால் ஆகுமா என்று பேசும் தொடை நடுங்கிகளும், ஏன் வீண் வம்பு என்று சொல்லும் கோழைகளுமல்ல நாட்டுக்குத் தேவை வீரர்கள் தேவை. உறுதிபடைத்த உள்ளங்கள் தேவை.
9. எதையும் தாங்கும் இதயம் வேண்டும், மறப்போம் மன்னிப்போம். கத்தியை தீட்டாதே, புத்தியைத் தீட்டு
10. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற பிரபலமான வரிகள் அனைத்தும் அண்ணாவினுடையதே.






