4ஆவது டெஸ்ட்; ஆஸி., 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

எதிர்ப்பே இன்றி எளிதில் அடங்கியது இந்திய அணி

மெல்போர்ன், டிச.30; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான “பாக்ஸிங் டே” டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியின் 4ஆவது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது.
நாதன் லயன் 4 1 ரன்களுடனும், ஸ்காட் போலண்டு 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

340 ரன்கள் வெற்றி இலக்கு

கடைசி நாளான இன்று ஆஸ்திரேலிய அணி மேலும் 6 ரன்கள் சேர்த்து 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் அந்த அணி இந்தியாவுக்கு 340 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடத்தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே திணறியது. வீரர்கள் வருவதும் அதே வேகத்தில் பெவிலியன் திரும்புவதுமாக இருந்ததால், இந்திய அணி மூழ்கும் கப்பல் போல் தத்தளித்தது.

சுவரில் வீசிய பந்தாக திரும்பிய வீரர்கள் 

இருப்பினும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், ரிஷப் பன்ட்டும் அணியை சரிவிலிருந்து மீட்க தீவிரமாகப் போராடினர்.
மிகவும் நிதானமாக விளையாடிய ரிஷப் பன்ட் 104 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு களம் கண்ட வீரர்களும் உடனுக்குடன் நடையைக் கட்டினர். தனி வீரராக நின்று போராடிக் கொண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் 84 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 155 ரன்களுக்கு சுருண்டது.

155 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2-1க்கு என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணியில் மூன்று வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமலும், ஆறு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலும் விக்கெட்டை இழந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 90 ரன்கள் எடுத்ததுடன், ஆறு விக்கெட்டுகளையும் சாய்த்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x