இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை
ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி

ஆடவர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் மீண்டும் சாம்பியன் கோப்பையை வெல்லும் முனைப்புடன், இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது.
21 வயதினருக்கான 10-வது ஆடவர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. இதன் முடிவில் இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், மலேசியா அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

நேற்று மாலையில் நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தானை எதிர்த்து ஜப்பான் களமிறங்கியது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது பாகிஸ்தான்.

பின்னர் நடந்த 2-வது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவை எதிர்த்து மலேசியா மோதியது. ஆட்டத்தின் 10 நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது இந்தியா. பின்னர் 2-வது பாதி ஆட்டத்திலும் அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அசத்தினர்.

போட்டியின் கடைசி 2-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி மூலம், மலேசியா 1 கோல் அடித்தது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.

இன்றிரவு 8.30 மணி நடைபெறும் பரபரப்பான இறுதிப்போட்டியில், நடப்புத் தொடரில் தோல்விகளே சந்திக்காத இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கடந்த முறை இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான், அதற்கு பழிவாங்க கர்ஜீக்கும் என்பதால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான்- மலேசியா அணிகள் மோத உள்ளன.







