சாம் கான்ஸ்டாஸூடன் மோதல் ஏற்பட்ட விவகாரம்

ஆஸி., ஊடகங்களின் முதன்மை இலக்காக மாறிய கோலி

மெல்போர்ன், டிச.28; ஆஸ்திரேலிய வீரர் சாம் கான்ஸ்டாஸூடன் வாக்குவாதம் ஏற்பட்ட விவகாரத்தில், இந்திய வீரர் விராட் கோலியை முதன்மை இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய ஊடகங்கள் வசைபாடி வருகின்றன.

மெல்போர்னில் நடைபெற்றுவரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று, விராட் கோலி மற்றும் சாம் கான்ஸ்டாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை சாம் கான்ஸ்டாஸ் அசாத்தியமாக எதிர்கொண்டு ரன்களை விளாசினார். இதனால் ஆத்திரமடைந்த விராட் கோலி ஒரு கட்டத்தில், கான்ஸ்டாஸ் மீது வேண்டுமென்றே மோதி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.

கோலிக்கு கண்டனம், 20% அபராதம்

கோலியின் செயலுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கண்டனம் தெரிவித்ததுடன், போட்டி கட்டணத்தில் 20 விழுக்காடு அபராதம் விதித்தது. இந்த செய்தி ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி, விராட் கோலி கடுமையாக வறுத்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், இந்த தண்டனை போதவில்லை எனக்கருதும் ஆஸ்திரேலிய ஊடகங்கள், கோலியை முதன்மை இலக்காகக் கொண்டு வசைபாடி வருகின்றன.

“கோமாளி” போல் சித்தரிக்க முயற்சி”

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கோலியை “கோமாளி” போன்று சித்தரிக்க ஆஸ்திரேலியே ஊடகங்கள் முனைவதாக விமர்சித்தார்.

தற்போது நிபுணராக ஆஸ்திரேலியாவில் முகாமிட்டிருக்கும் ரவி சாஸ்திரி, விராட் கோலிக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதாது என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கருதுவதை கண்கூடாகக் காண முடிகிறது என்று கூறினார். ஆஸ்திரேலிய ஊடகங்களின் செயல்பாடுகள் அவர்கள் விரக்தியில் இருப்பதை காட்டுவதாகவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஆஸி., ஊடகங்கள் விரக்தி

பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய அணி 3-0 அல்லது 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்திருந்தால், ஆஸ்திரேலிய ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் வேறுவிதமாக இருந்திருக்கலாம் என்றும் சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால், விராட் கோலி முதன்மை இலக்காகிவிட்டார் என, ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய தொடர் இதுவரை ஆஸ்திரேலியா வசம் செல்லாததால், மெல்போர்னில் வெல்ல அவ்வணி விரும்புவதாக சாஸ்திரி கூறியுள்ளார்.

“நான் ஆஸ்திரேலியாவுக்கு பல முறை சென்றிருக்கிறேன். ஒட்டுமொத்த நாடும் அணிக்கு பின்னால் வருவதை பார்த்திருக்கிறேன். ஆகவே இது விரக்தியின் வெளிப்பாடு தான்” என்று ஆஸ்திரேலிய ஊடகங்களை ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

 

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x